June 08, 2015

அவன் –
விடைகளற்ற வினாக்களை
காவல் காத்துக் கொண்டிருக்கிறான்.
அது –
அவனுக்கிடப்பட்ட
கட்டளையென்கிறார்கள் சிலர்.
கடமையென்கிறார்கள் சிலர்.
பொறுப்பென்கிறார்கள் சிலர்.

என்றாலும் –
யாரேனும் விடைசொல்லி
அவனை
கட்டளையிலிருந்தோ
கடமையிலிருந்தோ
பொறுப்பிலிருந்தோ
விடுவிக்கலாம்.

விடையின் சூட்சுமத்தை மட்டும்
என்னிடம் கேட்காதீர்கள்.
அதை –
படைத்தவனிடமே

கேட்டுக் கொள்ளுங்கள்.
நல்ல
கனவு வருமென
நினைத்தால்

கவிதை வந்து தொலைக்கிறது.
சென்னையிலிருந்து
நெல்லை சென்றவன்
தஞ்சையிலிருந்து
திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
நெல்லைக்கும் தஞ்சைக்குமிடையே
கனவுப் பாலம்
போட்டது யாரென்றுதான்

புரியவேயில்லை.

April 01, 2015

“கள்ளப்படம்” – ஒரு பார்வை



 ‘கள்ளப்படம்’ ஒரு நல்ல படம் என்று சொல்ல முடியாதவாறு அதன் கதைக்கரு தடுக்கிறது.

திரைக்கதையில் பின்னல்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால், ஆரம்ப காட்சிகள் இழுவையாக இருக்கின்றன.

நகைச்சுவை என முயற்சித்த சில விஷயங்கள் கைகொடுக்கவில்லை.

திரைப்படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் இசையமைப்பாளர் ‘கே’ மட்டும் ஒரு தொழில்முறை நடிகரைப் போல அநாயாசமாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் பாஸ் மார்க் பெறுகிறார். படத்தொகுப்பாளர் காகினும் இயக்குநர் வடிவேலுவும் நடிப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதிலும் இயக்குநர் வடிவேலு நடிகராக ஒற்றை இலக்க மதிப்பெண்களே  பெறுகிறார்.


ஒளிப்பதிவு … சில இடங்கள் தவிர்த்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது. பின்னணி இசை மற்றும் படத் தொகுப்பும் கூட படத்திற்கு நன்றாகவே ஒத்துழைக்கின்றன.

இயக்குநராக நடித்திருக்கும் இயக்குநர் தான் இயக்க முயற்சிக்கும் படக்கதையின் கருவாக தெருக்கூத்தை தேர்ந்தெடுத்திருப்பது நல்ல முயற்சி. ஆனால், அதை அடிப்படையாகக் கொண்டு அவர் சொல்லும் கதை அரதப் பழசு. அதை அவர் சொல்லும் விதமும் நமக்கே கொட்டாவி வரவழைக்கிறது. எனவே, அதை செவிகொடுத்துக் கேட்காத தயாரிப்பாளர் மீது கோபமே வரவில்லை.


ஆனால், தெருக்கூத்து காட்சிகளை படம் பிடித்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது.

அதே போன்று உதவி இயக்குநர்களின் வலிகளைச் சொல்கிறேன் என்ற போர்வையில் வெகு மேம்போக்காகவே கையாண்டிருக்கிறார்கள். எனவே, உதவி இயக்குநர்களின் வேதனை மனதிற்குள் புகவேயில்லை.

ஆடுகளம் நரேன் தயாரிப்பாளராக முக்கியமான கதாபாத்திரத்தில். ஆடுகளம், சுந்தர பாண்டியன் என படிப்படியாக வளர்ந்து வந்து கொண்டிருந்தவர் இவ்வளவு சீக்கிரமே ஒரு தேக்க நிலை அடைந்துவிட்டது போல் தோன்றுகிறது. சமீபத்தில் வந்த சரபம், ஆடாம ஜெயிச்சோமடா, ஜிகர்தண்டா என அனைத்துப் படங்களிலும் அவர் ஒரே மாதிரியான நடிப்பையே தருகிறார்.

வாய்ப்பிழந்த நடிகையாக வருபவர் சில காட்சிகளில் சின்னச் சின்ன முகபாவனைகளில் கவர்கிறார். பெரிதாக நடித்து விட்டார் என்று சொல்லமுடியாவிட்டாலும், கதைக்குள்ளும் கதாபாத்திரத்திற்குள்ளும் லாவகமாக பொருந்திப் போகிறார்.

செந்தில், தோற்றத்தில் வெகு காலமாக துறையில் இருக்கும் உதவி இயக்குநர்களை அப்படியே ஞாபகப்படுத்துகிறார். நடிப்பிலும் நகைச்சுவை நடிகர் செந்திலை விட இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார்.

சிங்கம்புலி முக்கியமான கதாபாத்திரத்தில் என்றாலும் …. நகைச்சுவைக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.


ஆரம்பத்தில் இழுவையாக ஆரம்பிக்கும் படம், போகப் போக சூடுபிடித்து, இறுதிவரை  சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது … அங்கங்கே லாஜிக் இடித்தாலும். உதாரணமாக, சிங்கம்புலியை ஸ்பாட்டிற்கு வரவழைப்பது, செல்பேசி மூலம் எச்சரிக்கை சென்றுவிட்டது தெரிந்தபின்பும் … படத்தொகுப்பாளர் பொறுமையாக கதை கேட்டுக் கொண்டிருப்பது என சில காட்சிகளைச் சொல்லலாம்.

படத்திற்கு தேவையே இல்லாமல் வரும் குத்துப்பாட்டும் அதை படமாக்கியிருக்கும் விதமும் இயக்குநர் வடிவேல் மிஷ்கினின் சீடர் என்பதைச் சொல்கின்றன.

ஒரு தவறான கருத்தைச் சொல்லிவிட்டு, அதைச் சரிக்கட்ட க்ளிஷேயான அந்த கடைசிக் காட்சியை வைத்திருக்கிறார்கள். க்ளிஷேதான் என்றாலும் அந்தக் காட்சி இல்லாவிட்டால், கதையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கும்.



ஓர் இயக்குநரின் முதல் படம் என்ற வகையில், ‘கள்ளப்படம்’ ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய படம்தான். இதுவரை பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள்.

     - யதார்த்தன்