January 23, 2016

நேற்றுபோல்
இன்றையநாள் இருந்துவிடக்கூடாது
என்பதே
இன்றைய வேண்டுதல்.

நேற்றையநாள் ஒன்றும்
மோசமில்லை.
அப்படியேதான்.
ஊனுண்டு
களித்து
கழித்து
அளவளாவி
உறங்கி
என
எல்லாம் சுமுகமே.

ஆனாலும் –
நேற்று நேற்றாய் மட்டும்
இருந்தாலே
இன்று இன்றாய்
இருக்க ஏலும்

நாளை நாளையாகவும்.
உங்களுக்கான சுதந்திரம்
எனக்கில்லையென்பதை
முதலில் நீங்கள்
உணருங்கள்.

நீங்கள் –
சாலைகளில் காலாற நடந்து செல்லலாம்.
சாலை திரும்பாத இடங்களில் கூட
திரும்பிச் செல்லலாம்.
வளைவற்ற இடங்களில்
வளைந்தும்
நெளிவற்ற இடங்களில்
நெளிந்தும்
செல்லலாம்.
கூடவே –
வட்டச் சுழல்களையும்
உண்டாக்கிச் செல்லலாம்

நானோ …
ஒரு
சமரசவாதியோ
அல்லது
சன்மார்க்கவாதியோ
என்பதை

புரிந்து கொள்ளுங்கள்.

January 21, 2016

மஹபூபுல்லாஷா காதிரி
என் தாத்தனென்று
சொன்னால்
உங்களுக்கு
புரியாமல் போகலாம்.
கோபம்கூட வரலாம்.

நீங்கள்…
மனதால்
பிரிந்து கிடக்கிறீர்கள்.
மதங்களாலும்.

உண்மைகள்
உங்கள் செவிநுனி விளிம்பில்
காத்துக் கிடக்கின்றன.
அவை –
கதவைத் தட்டும்போதெல்லாம்
நீங்கள்
உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
அல்லது
ஆழ்ந்த போதையிலிருக்கிறீர்கள்.

ஆயினும் –
சொல்லித்தான் ஆகவேண்டும்….
நான் –
மஹபூபுல்லாஷா காதிரியின்
பேரனென்பதை.
மட்டுமல்ல –
ஆதம் அவ்வாவின்
மக னென்பதையும்.